திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பெருவிழா
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பெருவிழா மிக சிறப்பாக இருந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ அதுல்யகுஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் ரதசப்தமி பெருவிழா கடந்த29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொன் உலவாக்கிழி வழங்கும் ஐதீக விழா நடைபெற்றது. திருஞானசம்பந்தரின் தந்தையை சிவஇருதயபாதருக்கு வேள்வி நடத்த ஆயிரம் பொற்காசுகள் தேவைப்பட்டது. கோமுக்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து இருந்த திருஞானசம்பந்தர் இடரினும் தளரினும் என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். பாடல் பாடி முடிந்ததும் பூதகணம் மூலம் கொடிமரம் அருகில் பலிபீடத்தில் ஆயிரம் பொற்காசுகளை இறைவன் கொடுத்து அனுப்பியதாக புராண வரலாறு தெரிவிக்கின்றது.
ஆண்டுதோறும் ரதசப்தமி பெருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக திருஞானசம்பந்தருக்கு பொன் உலவாக்கிழி வழங்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு திருஞானசம்பந்தர் பல்லக்கில் ஊர்வலமாக ஆலய கொடி மரத்திற்கு எழுந்தருளினார். அங்கு இறைவனைப் பாடும் நிகழ்ச்சியும் தொடர்ந்து பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, திருமுறை இசை அறிஞர்கள் 4பேருக்கு ரூ.5000 வீதம் பொற்கிழி மற்றும் விருதுகளை வழங்கி அருள் ஆசி கூறினார்.
"காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க்கம்பொன் ஆயிரங் கொடுப்பர் திருஞானசம்பந்தர் ஆவடு துறையனாரே"
என்று, திருஞான சம்பந்தருக்கு தலத்து இறைவன் செம்பொன் அருளிய அருள் திறத்தை, அப்பர் சுவாமிகள் தம்முடையப் பதிகத்தில் போற்றுகின்றார்.