பொங்கல் தொகுப்பிற்கான கரும்புகளை நேரடியாக அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

பொங்கல் தொகுப்பிற்கான கரும்புகளை நேரடியாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-01-05 11:36 GMT

பைல் படம்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் அன்று தாங்கள் விளைவித்த நெல்மணியில் இருந்து கிடைத்த அரிசியை கொண்டு பொங்கலிட்டு, கரும்பு வைத்து படையலிட்டு விவசாயம் செழிக்க காரணமான சூரியபகவானை வழிபடுவது தமிழர் பண்பாடு.

இதில் நெல்லுக்கு அடுத்தபடியாக அனைவரது மனதிலும் இனிக்கும் கரும்பு முக்கிய இடம் வகிக்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க செங்கரும்பு தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கரும்புகளை அந்தந்த மாவட்டங்களில் 1 கரும்பிற்கு 33 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்ய உத்தரவிட்டது. கரும்புகள் இடைத்தரகர்கள் மூலம் 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். தமிழக அரசு கரும்புகளை விவசாயிகளிடமிருந்து நேரிடையாக கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, விவசாயிகளின் நலன் கருதி கரும்பு கொள்முதல் செய்யும்போது அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரிடையாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ மட்டுமே கரும்புகளை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பிற்கான கரும்புகளை 1 கரும்பு 15 ரூபாய் என்று தி.மு.க. பொறுப்பாளர்களே இடைத்தரகர்களாக இருந்து முன்பணம் கொடுத்து பெரும்பாலான கரும்புகளை முன்னதாகவே கொள்முதல் செய்துள்ளதாகவும், தங்களிடமிருந்து பொங்கல் சிறப்பு தொகுப்பிற்காக முன்னதாகவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்பிற்கு அரசு அறிவிப்பின்படி உரிய விலையை பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News