பட்டதாரி இளைஞரின் பிரமிப்பூட்டும் ஓவியங்கள்
சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞரின் பிரமிப்பூட்டும் பல்வேறு வகையான ஓவியங்கள்.;
கூழாங்கல்,பென்சில்,பாட்டில் ஓவியம்,வண்ண அரிசி ஓவியம் என தொடரும் ரஞ்சித்குமாரின் சாதனை முயற்சியை பாராட்டும் கிராமமக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டியன்- மகேஷ்வரி தம்பதியரின் மகன் ரஞ்சித்குமார்(22). முதுகலை அறிவியல் பட்டதாரியான ரஞ்சித்குமார் சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் அதீத ஆர்வம் கொண்ட வர். எந்த பயிற்சியுமின்றி, கல்லூரி படிப்பை முடித்த பிறகு, முழு நேர ஓவியராக தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ளார்.
பென்சில் ஓவியம்,பாட்டில் ஓவியம்,கலர் பென்சில் ஓவியம்,அக்ரிலிக் மற்றும் வாட்டர் கலர் பெயிண்டிங்,அரிசி ஓவியம்,கூழாங்கல் ஓவியம் என 400 க்கும் மேற்பட்ட ஓவியங்களை, வரைந்துள்ளார். அரிசியில் பல்வேறு தலைவர்களின் உருவங்களை ஓவியங்களாக வரைவது இவரது சிறப்புகளில் ஒன்று. தனக்கு மிகவும் பிடித்த ஓவியக்கலையில் தனது தனித்துவமான அடையாளத்தை பெறும் சாதனை முயற்சியாக 97 நாடுகளின் தேசியக் கொடிகளை( ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட மற்றும் தென் அமெரிக்கா உட்பட ) 97 கூழாங்கற்களில் அக்ரிலிக் பெயின்ட் கொண்டு, அந்தந்த நாட்டின் பெயருடன் 1 மணி நேரம் 43 நிமிடங்களில் வரைந்து, உலக சாதனை முயற்சி மேற்கொண்டார். இவரது சாதனை முயற்சியை உலக சாதனைகளை பதிவு செய்யும் ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்கார்டு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அதன் நிறுவனர் ஜேக்கப் புதிய உலக சாதனையாக அங்கீகரித்து உலக சாதனை பதிவு சான்றிதழை வழங்கிபாராட்டினர். ஏற்கனவே 85 நாடுகளின் கொடிகளை கூழாங்கற்களில் வரைந்ததே, இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.ஓவிய கலையில் மேலும் பல்வேறு உலக சாதனைகளை செய்திட ஒவ்வொரு நொடியும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் ரஞ்சித்குமாரின் முயற்ச்சியை அவரது பெற்றோரும் கிராமமக்களும் ஊக்குவித்து பாராட்டிவருகின்றனர்.