மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் தென்னக ரயில்வே மேலாளர் ஜான் தாமஸ், திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். புதிதாக அமைக்கப்பட்ட உடல் எடை, உயரம் உள்ளிட்ட பி.எம்.ஐ. சரிபார்க்கும் இயந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர். மேலும் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு வந்த பொதுமேலாளரிடம் மயிலாடுதுறை எம்.எல்.ஏ.ராஜகுமார் திருச்சி-சென்னை சோழன் விரைவு ரயிலை ஜனசதாப்தி விரைவு ரயிலாக மாற்றி தினமும் இரண்டுமுறை சென்னை சென்றுவர இயக்கவும், நாகூர்-பெங்களூரு பாசஞ்சர் ரயில், மயிலாடுதுறை-விழுப்புரம், திருச்சி பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் தென்னக மேலாளர் ஜான்தாமஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை ஆய்வு பணிகளை மேற்கொள்வதாகவும்,கொரோனா தொற்று பரவலால் பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது ஒமிக்ரான் பரவி வருகிறது. தொற்று குறைந்த பிறகு அவற்றை மீண்டும் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால்-பேரளம் ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 2022-2023-ஆம் ஆண்டு நிறைவு பெறும். திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி வழித்தடத்தில் வரும் மார்ச் மாதத்தில் பணிகள் முடிவடையும். மயிலாடுதுறை ஜங்ஷனில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.