சீர்காழி: ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் இயற்கை விவசாயிகள்!
சீர்காழியில் உணவின்றி தவித்த ஆதரவற்றோருக்கு இயற்கை விவசாயிகள் உணவு வழங்கி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயியான இளைஞர் மணிகண்டன். இவரது நண்பரும் இயற்கை விவசாயுமான தினேஷ்குமாருடன் இணைந்து கொரோனா தொற்று ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர்கு உணவும் குடிநீரும் வழங்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து தங்கள் வீட்டிலேயே உறவினர்களை கொண்டே சுகாதாரமான உணவினை சுடசுட தயார் செய்து வழங்குகின்றனர். அவற்றை நண்பர்கள் உதவியுடன் அட்டை பெட்டிகளில் அடைத்து, குடிநீர் பாட்டில்களுடன் ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவராக சென்று ஆதரவற்றோருக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்.
மங்கைமடம் கிராமத்தில் துவங்கும் இவர்களின் சேவை சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், புத்தூர், கொள்ளிடம் பகுதிகள் என ஆதரவற்றோரை தேடி தேடி உணவளித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கால் பாதிக்கபட்ட மக்களுக்கு இயற்கை விவசாயிகள் செய்து வரும் சேவை பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.