சிலம்ப போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு தருமபுரம் ஆதீனம் பாராட்டு
மயிலாடுதுறை அருகே சிலம்ப போட்டியில் சாதனை படைத்த அரசு உதவி பெறம் பள்ளி மாணவருக்கு தருமபுரம் ஆதீனம் பாராட்டு தெரிவித்தார்.;
தருமபுரம் ஆதீனம் முன் சிலம்பம் சுற்றிக்காட்டிய மாணவன்.
மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தருமபுரம் குருஞானசம்பந்தர் உதவிபெறும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் அஸ்விந்த். கட்டடத் தொழிலாளி அன்பழகன் என்பவரின் மகனான அஸ்விந்த் அண்மையில் மதுரையில் நடைபெற்ற சப்-ஜூனியர் சிலம்பப் போட்டியில் பங்கேற்று, மாநில அளவில் 3-ஆம் இடத்தையும், மதுரை மண்டல அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர் இன்று பள்ளி நேர முடிவில், பள்ளி வளாகத்தில் சிலம்பம் சுற்றிக்காட்டி சக மாணவர்களை அசத்தினார். அதனை தொடர்ந்து மாணவர் அஸ்விந்த், அவரது பெற்றோர் அன்பழகன், ரேணுகா ஆகியோர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அவரிடம் சான்றிதழ், விருது மற்றும் பதக்கத்தைக் காண்பித்து அருளாசி பெற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.