மயிலாடுதுறை: கடைக்கு சீல் வைக்க வந்த அதிகாரியை தள்ளி விட்டதால் பரபரப்பு

மயிலாடுதுறையில் ஜவுளி கடைக்கு சீல் வைக்க வந்த நகராட்சி அதிகாரியை ஊழியர்கள் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-22 11:20 GMT

மயிலாடுதுறை ஜவுளி கடையில் சோதனை நடத்த வந்த மாநகராட்சி அதிகாரியை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து வணிக நிறுவனங்களிலும் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை கடைத்தெருவில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பெரும்பாலான கடைகளில் அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் விற்பனை நடைபெற்று வருவதாக நகராட்சி அலுவலர்களுக்கு புகார் வந்தது.

இதையடுத்து மயிலாடுதுறை நகராட்சி நகர்நல அலுவலர் மலர்மன்னன் தலைமையில் பல்வேறு கடைகளில் நகராட்சி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றாத ஒரு நகை  நகைகடைக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தனர் .

இதேபோல் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திய சான்று இல்லாதது, முககவசம் அணியாதது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத ஒரு ஜவுளி கடைக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து கடையை பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து அருகே உள்ள இன்னொரு ஜவுளி கடைக்கு ஆய்வுக்கு சென்ற போது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொரோனா விதிமுறையை பின்பற்றாததால் கடைக்கு சீல்வைக்க நகர்நல அலுவலர் மலர்மன்னன் உத்தரவிட்டார்.

இதனால் கடை உரிமையாளருக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நேரத்தில் கடைக்கு சீல் வைக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது கடை உரிமையாளரும், அவரது உறவினர்களும் நகர்நல அலுவலர் மலர்மன்னனை முற்றுகையிட்டு தள்ளிவிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நகராட்சி ஆணையர் பாலு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இன்று ஒருநாள் மட்டும் கடையை மூடவேண்டும் என்றும் நாளை முதல் கொரோனா விதிமுறையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் கடைக்கு தீபாவளி பண்டிகை வரை சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து சென்றனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News