மயிலாடுதுறை அருகே சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
மயிலாடுதுறை அருகே ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அரையபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின், 25ஆம் ஆண்டு சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக கடந்த 14-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் உற்சவம் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் வீதியுலாவும் நடைபெற்றது. இன்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு கரகம் புறப்பாடு செய்யப்பட்டது. காப்பு கட்டி விரதமிருந்து பக்தர்கள் காவிரி கரையிலிருந்து அலகு காவடி எடுத்தும், 16 அடிநீள அலகை வாயில் குத்தியும், மஞ்சள் உடை உடுத்தி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் ஆலயத்தின் முன்பே வந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் தீமிதித்து தங்களது நேர்த்திகடன் செலுத்தினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் தீபாராதனையுடன் சுவாமி ஊர்வலமும் சிறப்பாக நடைபெற்றது.