சீர்காழியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த லாட்டரி சீட்டு கடையில் கொள்ளை

சீர்காழியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த லாட்டரி சீட்டு கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.;

Update: 2022-05-04 09:52 GMT

கொள்ளை நடந்த லாட்டரி சீட்டு கடை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி - சிதம்பரம் சாலையில் இரணிய நகரில் உள்ள ஒரு கடையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த கடையில் இருந்து தான் சிதம்பரம், வல்லம்படுகை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்த விற்பனையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இந்த கடையில் 3க்கும் மேற்பட்ட பணியாளர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஏராளமானோர் லாட்டரி சீட்டுகளை வாங்கி கொண்டு இருந்த நிலையில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு தங்கள் வாகனத்தில் கொண்டு வந்த பயங்கர ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு கடையின் உள்ளே புகுந்து கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பணியாளரை பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதனை கண்டு அஞ்சிய மீதமுள்ள இரண்டு பணியாளர்களும் பயந்துபோய் கடையில் அமர்ந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் பணியாளர்களின் விலை உயர்ந்த 3 செல்போன்களையும் பிடுங்கிக்கொண்டு கடையில் இருந்த சுமார் ரூ 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு தாங்கள் கொண்டுவந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் குடியிருப்புக்கு மத்தியில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News