சீர்காழி அருகே கார் மோதிய விபத்தில் இருவர் பலி - 5 பேர் காயம்
சீர்காழி அருகே கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; 5 பேர் படுகாயம் அடைந்தனர்.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேலபாதி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்.47, இவரும் இவரது மனைவி கோமதி, மகள் சந்தியா, மகன் சரவணன் ஆகிய 4 பேரும், காரில் திருநள்ளாறு சென்று விட்டு திரும்பியுள்ளனர். வழியில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காருகுடி கிராமத்தில் வந்த போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சசிக்குமார் காரை ஒதுக்கியுள்ளார்.
அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் உள்ள பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்த கீழசாலை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் 64, கருகுடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் 45 ஆகியோர் மீது மோதிவிட்டு அருகில் இருந்த ஆற்றில், கார் கவிழ்ந்துள்ளது. இவ்விபத்தில் சுந்தரம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மகாலிங்கம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கார் ஆற்றில் கவிழுந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து காரினுள் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.