வைதீஸ்வரன்கோவில் பகுதியில் கொட்டப்படும் மருத்துவகழிவுகளால் தொற்றுபரவும் அபாயம்
மருத்துவ கழிவுகளை அகற்றவும் அய்யாவையனாறு கரையோரப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்;
வைத்தீஸ்வரன்கோவில் அருகே ஆற்றங்கரையோரம் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்
சீர்காழி அருகே வைதீஸ்வரன் கோவில் பகுதியில் அமைந்துள்ள அய்யாவையனாறு ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் ஆற்றில் கலந்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் கழிவுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் அருகே அய்யாவையனாறு பாசன ஆறு அமைந்துள்ளது.20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 5000 ஏக்கர் விளைநிலங்களுக்கு பிரதான பாசன ஆறாக விளங்கும் இந்த ஆற்றின் மேற்குப் பகுதி கரையோர பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள்,நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் ஏற்றிய நூற்றுக்கணக்கான கவர்கள் என மருத்துவ கழிவுகள் ஏராளமாகக் ஒட்டப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றாலோ அல்லது திடீர் மழை பெய்தாலோ இந்த கழிவுகள் எல்லாம் ஆற்றில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே பாசன ஆற்றின் கரையோரம் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளை கொட்டி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உடனடியாக மருத்துவ கழிவுகளை அகற்றவும் அய்யாவையனாறு கரையோரப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.