தரங்கம்பாடியில் கடல் சீற்றல்: அலை தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
தரங்கம்பாடியில் கடல் சீற்றமாக உள்ளது; கடற்கரையில் அலை தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரை மிகச்சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு டென்மார்க் நாட்டவரால் கி.பி 1620 ல், புகழ்வாய்ந்த டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை பீடமாக அமைந்தது. இந்தக் கோட்டையில், சுமார் 10க்கும் மேற்பட்ட அறைகள் இரண்டு தளங்களில் உள்ளன. பண்டகசாலை, சிறைச்சாலை, சமையல் அறை, ராணுவ வீரர்களுக்கான அறைகள் உள்ளன.
கோட்டையின் உட்புறத்தில் புல்வெளி தளம், முதல் தளத்தை பார்வையாளர்கள் சுற்றி பார்க்க நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோட்டையில் தற்போது தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. டேனிஷ் கால நாணயங்கள், கல்வெட்டுகள், உள்ளிட்ட பல்வேறு ஆவனங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோட்டையை சுற்றி பிரமாண்ட மதில் சுவர் உள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள், தினந்தோறும் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட நிவர் மற்றும் புரவி புயல்கள் காரணமாக ஏற்பட்ட கடல் அலைகளின் கடும் சீற்றத்தால் கோட்டை மதில் சுவரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த முள்வேலி தடுப்புசுவர் கடல்சீற்றம், கடல்அறிப்பின் காரணமாக சேதமடைந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே, தொடர் கடல் சீற்றம் காரணமாக, டேனிஷ் கோட்டையின் அருகே கடல் அரிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது கனமழை மற்றும் கடல்சீற்றம் காரணமாக முள்வேலி தடுப்புசுவர் சேதமடைந்துள்ளது. இதனால் கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. உடனடியாக கோட்டையின் அருகே கடலில் கருங்கல்லால் ஆன அலை தடுப்புச் சுவரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.