மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற உணவகத்திற்கு அதிகாரிகள் சீல்
மயிலாடுதுறையில் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி சுகாதாரமற்ற உணவகத்திற்கு சீல் வைத்தனர்.
மயிலாடுதுறை பகுதியில் கடைகள் மற்றும் உணவகங்களில் காலாவதியான உணவுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அசைவ ஓட்டல்களில் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்;சி ஆணையர் பாலு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், நகர்நல அலுவலர் மலர்மன்னன் மற்றும் அதிகாரிகள் மயிலாடுதுறை பேருந்து நிலையம் ,டவுன் எக்ஸ்டென்ஷன், ஸ்டேபாங்ரோடு, காந்திஜிரோடு, கூறைநாடு பகுதிகளில் டீ கடை, குளிர்பான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்களை பறிமுதல் செய்து அவற்றை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். பல்வேறு உயர்தர அசைவ உணவகங்களில் சோதனை செய்தபோது காலாவதியான சிக்கன், மட்டன், மீன், இறால் போன்றவை குளிர்பதனபெட்டியில் இருப்பு வைத்து சூடு படுத்தப்பட்டு பரிமாறப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, தரமற்ற இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
ஒரு அசைவ உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் கூடம் இருந்ததால் அந்த உணவகத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். கெட்டுப்போன அசைவ உணவுகள் மற்றும் கடைகளில் காலாவதியான தின்பண்டங்களை வைத்திருந்ததற்காக பல்வேறு அசைவ உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட உணவுகளின் மீது பினாயில் உள்ளிட்ட ரசாயனங்களை ஊற்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர். இதுபோன்று தொடர்ந்து சோதனை நடைபெறும் என்றும் தரமான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவக உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.