மயிலாடுதுறையில் வாடகை பண பிரச்சினையில் பெண் தூக்கிட்டு மர்ம சாவு

மயிலாடுதுறையில் வாடகை பண பிரச்சினையில் பெண் தூக்கிட்டு மர்மமாக இறந்தார்.

Update: 2021-12-20 07:56 GMT

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி மாலதி (52). இவர் மயிலாடுதுறை வெள்ளான்தெருவில் கல்யாணம் என்பவரது வீட்டு மாடியில் 3 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வந்தார். ராஜேந்திரனின் இரண்டாம் மனைவியான மாலதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 2 வருடங்களாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவரிடம் வீடு புரோக்கர் ஸ்ரீதர் என்பவர் ரூ.1.50.000 பணம் வாங்கிகொண்டு, வீட்டு உரிமையாளருக்கு மாதம் ரூ.2.500 வாடகை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், புரோக்கர் ஸ்ரீதர் பணத்தை திரும்பத் தர மறுப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மாலதி மனு அளித்தார்.

இதையடுத்து, மயிலாடுதுறை போலீசார் கடந்த 2-ஆம் தேதி இருவரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, 10 நாள்களில் வீட்டை காலி செய்து கொள்வதாகவும், வீட்டை காலி செய்தவுடன் பணத்தை திருப்பித் தருவதாகவும் இருவரிடமும் எழுதி வாங்கியுள்ளனர். இந்நிலையில் மாலதி வீட்டின் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படாததால், சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் கல்யாணம் மயிலாடுதுறை போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், மயிலாடுதுறை போலீசார் கதவை உடைத்து பார்த்தனர்.

அங்கு மாலதி தூக்கில் சடலமாக தொங்கினார். இதையடுத்து போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News