தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான வரலாற்று சின்னங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளருமான பெ.சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள டேனிஷ் கோட்'டை மதில்சுவரை சுற்றியுள்ள கடந்த ஆண்டு கடல் அரிப்பால் உடைந்து போன பாதுகாப்பு வேலிச்சுவர், கடற்கரையில் பராமரிப்பில்லாமல் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ள மின்விளக்குகள், 2கிலோ மீட்டர்தூரம் கரையில்லாமல் பாதிப்பை ஏற்படுத்தும் உப்பனாறு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெ.சண்முகம் தமிழகத்தில் உள்ள மிக தொன்மையான நகரங்களில் தரங்கம்பாடியும் ஒன்று. 400 ஆண்டுகள் பழமையான டேனிஷ்கோட்டை தற்போது பாழடைந்தும், பராமரிப்பின்றியும்,சிதிலமடைந்தும் இருப்பது வேதனையாக இருக்கிறது. தற்போது தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள தமிழக அரசு கீழடி உள்ளிட்ட பல தொன்மையான நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதற்கு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும்,அதற்குண்டான நிதி ஒதுக்கீடுகளும் பாராட்டுக்குரியது.
அதேப்போன்று தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையையும் புதுப்பித்து ,பராமரித்து, பாதுகாக்க வேண்டுமெனவும் அதற்காக தமிழக அரசின் தொல்லியல் துறை அமைச்சர் தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை நேரிடையாக வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரங்கம்பாடியில் கடல் அரிப்பால் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விலைநிலங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக மாறியுள்ளது. கடல்நீர் உட்புகாதவாறு தடுப்புசுவர் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல்நீர் உட்புகுந்ததால் குடிநீர் உப்புநீராகியுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உப்பனாற்றில் கரைஅரிப்பால் 2 பக்க கரையே இல்லாமல் உள்ளது. கரைகளை பலப்படுத்தி கடல்நீர் உப்பனாற்றில் உட்புகாதவாறு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின் போது கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின்,எஸ்.துரைராஜ், டி.சிம்சன்,ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.