சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம்

சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-04-16 04:14 GMT

பைல்படம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் உட் கோட்டத்தில் உள்ள 7 போலீஸ் நிலைய  எல்லை பகுதிகளில் கள்ள சாராயம் மற்றும் வெளிமாநில மது விற்பனையை தடை செய்வதற்காக சீர்காழியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு 1 இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 17 பேர் பணியாற்றி வந்தனர். கடந்த 7ஆம் தேதி சாராய விற்பனை குறித்த வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரல் ஆனது.

இது குறித்து விசாரணை நடத்திய மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி. நிஷா பரிந்துரையின் பேரில் கடந்த 8ஆம் தேதி சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் காவலர் ஹரிஹரன் ஆகியோரை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் நேற்று சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றிய மீதமுள்ள 15 போலீசாரையும் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டார். போலீசார் அனைவரும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் போலீசார் நியமிக்கப்படும் வரை சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

வீடியோ வைரல் ஆனதால் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இது வரவேற்கப் பட்டாலும் சாராயம் மற்றும் வெளிமாநில மது விற்பனையை முழுமையாக தடை செய்துவிட முடியாது. சாராயம் மற்றும் வெளிமாநில மது விற்பனைக்கு உடந்தையாக செயல்படும் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் சில போலீசாரின் நடவடிக்கை குறித்தும் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் முன்வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கள்ளச்சாராய விற்பனையை தடை செய்ய முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News