சமய உரிமை -ஆதீனம் பல்லக்கு தூக்குபவர்கள் முதல்வருக்கு கோரிக்கை
பல்லக்கு தூக்குவது எங்களது சமய உரிமை என ஆதீனம் பல்லக்கு தூக்குபவர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தருமபுரம் ஆதீனத்தில் ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமர்த்தி சுமந்து வீதியுலா செல்வது எங்கள் சமய உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம் என்றும் பல்லக்கை சுமப்பவரின் கருத்துக்களை கேட்காமலேயே பல்லக்கு நிகழ்வுக்கு தடை விதித்துள்ளதாகவும் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு சுமப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை வலியுறுத்தி தருமபுரம் ஆதீனத்தல் பல்லக்கு சுமக்கும் 72 பேர் சுயவிருப்பத்தின் பேரிலேயே பல்லக்கு சுமப்பதாக எழுதி கையெழுத்திட்டு மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் வழங்கியுள்ளனர்.
தருமபுரம் ஆதீனத் திருமடத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கும் 72 பேர் பரம்பரை பரம்பரையாக சிவிகை பல்லக்கு தூக்கி வருகின்றனர். இவர்களில் 4 பேர் கோடி நாட்டாமை என அழைக்கப்படுகின்றனர். அவர்களது மேற்பார்வையில் தற்போது பல்லக்கு தூக்கும் இளைஞர்களில் பலர் கல்லூரிகளில் படிப்பவர்களாகவும், பட்டப்படிப்பை முடித்தவர்களாகவும் உள்ளனர்.
தங்களுக்கு கல்வி அறிவு கொடுத்தது தருமபுரம் ஆதீனம்தான் என்றும், தங்களுக்கு வீடு மற்றும் நிலம் ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் வழங்கியுள்ளதாகவும், தங்களை யாரும் கட்டாயப்படுத்தி பல்லக்கை சுமக்க சொல்லவில்லை. பல்லக்கு சுமப்பது காலம் காலமாக உள்ள சமய உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, தடை விதிக்கப்பட்ட பல்லக்கு நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.