விவசாயிகளுக்கு நிவாரணம்: மயிலாடுதுறையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி மயிலாடுதுறையில் அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அ.தி.மு.க. சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், அனைவருக்கும் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், சம்பா அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர்.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி தாலுகா அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 தாலுகாவில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.