தரங்கம்பாடியில் அங்காடி விற்பனையாளர்களுக்கு மண்டல அளவில் ஆய்வு கூட்டம்
தரங்கம்பாடியில் அங்காடி விற்பனையாளர்களுக்கு மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடந்தது.;
மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி வட்டத்தில் அங்காடி விற்பனையாளர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையின் துணை பதிவாளர் மனோகரன், நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வுக் கூட்டத்தில் அங்காடி விற்பனையாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினர்.
நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி பேசுகையில் அங்காடிகளை சுத்தமாக வைத்திருத்தல், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை முறையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், கிடங்கிலிருந்து வரப்பெறும் அத்தியாவசிய பொருட்களை உடனுக்குடன் விற்பனை முனைய இயந்திரத்தில் வரவு வைத்தல், விற்பனைத் தொகையினை உடனுக்குடன் தொடர்புடைய சங்கங்களில் செலுத்துதல், தமிழக அரசால் வழங்கப்படும் ஊட்டி தேயிலை மற்றும் அயோடின் சத்து நிறைந்த அரசு உப்பினை பொது மக்களிடம் அதனுடைய நன்மையை எடுத்துக் கூறி விநியோகம் செய்தல் உள்ளிட்ட 19 வகையான அறிவுரைகளை வழங்கி அதனை செயல்படுத்திட அனைத்து அங்காடி விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் ஆய்வுக் கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பாபு, தனி வருவாய் ஆய்வாளர் ஜோசப்ராஜ், வட்ட பொறியாளர் ஐயப்பன் மற்றும் அங்காடி விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.