சீர்காழி அருகே பக்கிங்காம் கால்வாய் உடைப்பை சீரமைக்க எம்பி உறுதி

சீர்காழி அருகே உள்ள கிராமங்களில் பக்கிங்காம் கால்வாய் உடைப்பை சீரமைத்து கொடுப்பதாக எம்.பி உறுதியளித்துள்ளார்.

Update: 2022-01-07 12:33 GMT

முகத்துவார பகுதிகளை பார்வையிட்ட மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மடத்துக்குப்பம், நாயக்கர்குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாயின் இரு பக்க கரைகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. தற்போதைய கனமழையின் காரணமாக எஞ்சியிருந்த கரைகளும் உடைந்து சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கடல் நீர் புகுந்து நிற்கிறது.

அதேபோல் கால்வாயில் இருந்து கடலுக்கு செல்லும் முகத்துவாரம் முற்றிலுமாக தூர்ந்து போனதால் படகுகள் அவ்வப்போது தரை தட்டி கவிழ்ந்து வருகிறது. இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.மேலும் கடல் அலைகளின் தாக்கத்தால் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.இதே நிலை நீடித்தால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே தங்கள் பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு கருங்கல் சுவர் அமைத்து தரவும் பக்கிங்காம் கால்வாயின் இரு பக்க கரைகளையும் சீரமைத்து முகத்துவாரத்தை தூர்வாரவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கை குறித்து அறிந்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம் மற்றும் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் உள்ளிட்டோர் மடத்துக்குப்பம் மற்றும் நாயக்கர் குப்பம் கிராமங்களில் மீன்வளத் துறை அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மீனவர்களிடம் விரைவில் தங்கள் பகுதி முழுவதும் கருங்கல் கொட்டுவதற்கும் பக்கிங்காம் கால்வாயை சீரமைத்து முகத்துவாரம் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags:    

Similar News