கொள்ளிடம் படுகையில் மழைநீர் தேங்கியதால் மலர், காய்கறி செடிகள் பாதிப்பு

சீர்காழி அருகே கொள்ளிடம் படுகையில் மழைநீர் தேங்கியதால் மலர், காய்கறி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-12-05 10:20 GMT

கொள்ளிடம் படுகையில் மழை நீர் தேங்கியதால் மலர் செடிகள் அழுகி சேதம் அடைந்தன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள கிராமங்களான சந்தைப்படுகை, நாதல்படுகை, முதலை மேடு திட்டு, திட்டுபடுகை,நாணல் படுகை உள்ளிட்ட கிராமங்களில் 300 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை,முல்லை, காக்கட்டான் உள்ளிட்ட மலர் வகைகளும் மிளகாய், வெண்டை, கத்தரி ,புடலங்காய்,கீரை உள்ளிட்ட காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு வருகிறது.

இப்பகுதியிலுள்ள ஒவ்வொரு வீடுகளிலும் கொல்லைப் புறங்களிலும் தங்களது நிலங்களிலும் காய்கறி மற்றும் மலர் சாகுபடியை சிறு விவசாயிகள் குடும்பத்தினரோடு செய்து வருகின்றனர். சம்பா சாகுபடி பாதிக்கப்படுவதால் இப்பகுதி முழுவதும் பெரும்பாலும் மலர் மற்றும் காய்கறி சாகுபடியை நம்பியுள்ளனர். நாள்தோறும் மலர் மற்றும் காய்கறிகளை பறித்து நகர் பகுதிக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடமும் மற்றும் பொதுமக்களிடம் நேரடி விற்பனை செய்தும் இச்சிறு விவசாயிகள் வருமானம் ஈட்டிவந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீராலும் இப்பகுதியில் பெய்த மழை நீர் கொள்ளிடம் ஆற்றில் வடியாததாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டது.அதே நேரம் அதிகப்படியான உபரிநீர் திறப்பால் படுகை கிராமங்களிலும் வெள்ளநீர் புகுந்ததால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலர்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது.1 வார காலத்திற்கு மேலாக வெள்ளநீரில் பயிர்கள் மூழ்கியிருந்தது. தற்போது தண்ணீர் வடிந்ததும் மழை ஓய்ந்த நிலையில் செடிகள் அனைத்துமே அழுகி கருகியுள்ளது.

மல்லிகை,முல்லை,காக்கட்டான் உள்ளிட்ட செடிகள் அழுகிய நிலையில் எஞ்சிய செடிகளில் பூக்களும் சிறுத்து போனதால் இப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மலர்ச்செடிகள் வைத்து இரண்டு ஆண்டுகள் பராமரித்த பின்னரே அதில் இருந்த பலன்களை பெறமுடியும் நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகள் பராமரித்த அனைத்து செடிகளும் வெள்ள நீரில் மூழ்கி அழிந்து போனதால்  மீண்டும் சாகுபடியை எப்படி செய்வது என தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் மலர் சாகுபடி போதிய பலன் தராத நிலையில் தற்போது பூக்களின் விலை 1000 முதல் 1500 வரை உயர்ந்த நிலையிலும் தங்களால் எந்த பலனும் பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.ஒவ்வொரு முறையும் செடிகளை நட்டு பராமரித்து பலன்கள் பெறும் நிலைக்கு வரும்போது உபரி நீர் திறக்கப்படும் செடிகள் அழிந்து போவதும் தொடர்கதையாக உள்ளது என தெரிவித்த விவசாயிகள் தங்கள் பகுதியின் வழியே உபரி நீர் செல்லும்போது கிராமத்திற்குள் பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்கவும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மலர் செடிகளும் காய்கறி விதைகளும் தோட்டக்கலைத்துறை மூலம் மானியமாக அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மலர்ச்செடிகள் மற்றும் காய்கறிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News