மயிலாடுதுறை அருகே பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள், மாணவர்கள் போராட்டம்
மயிலாடுதுறை அருகே பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.;
மயிலாடுதுறையிலிருந்து கோடங்குடி வழியாக நெடுமருதூருக்கு A9 என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே கோடங்குடி மார்க்கமாக இயக்கப்படும் இந்த பேருந்து அனைத்து நாட்களிலும் சரியான நேரத்திற்கு இயங்காததால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் மாலை 4 மணிக்கு பேருந்து இயக்கப்படுவதால் பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வராததால் பள்ளிக்கு தினமும் தாமதமாக வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும். சில நாட்களில் பேருந்து வராமல் இருக்கும் பொழுது, வேறு வாகன போக்குவரத்து இல்லாததால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர்.
இதனை கண்டித்து இன்று கோடங்குடி வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாலையில் உரிய நேரத்தில் பேருந்தினை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மதியம் மற்றும் இரவு என கூடுதலாக ஒரு முறை பேருந்தினை இயக்க வேண்டும் எனவும் , தினமும் ஐந்து முறை மயிலாடுதுறை முதல் கோடங்குடி மார்க்கமாக அரசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இயக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அரசு பேருந்து கோடங்குடி மார்க்கத்தில் உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.