மயிலாடுதுறை அருகே மின்வாரிய அலட்சியத்தால் நெற் பயிர்கள் கருகியதாக புகார்
மயிலாடுதுறை அருகே மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் நெற் பயிர்கள் கருகியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டு கொற்கை பகுதியில் டிரான்ஸ்பார்மரில் இருந்து வரும் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தும் மின்சார துறையினர் அறுந்து விழுந்த மின்கம்பியை இதுவரை சரி செய்யவில்லை. மின்சாரம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை.
இதனால் தண்ணீர் இல்லாமல் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு சம்பா நெற்பயிர்கள் கருகி வருகிறது. ஏற்கனவே மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பயிர்களுக்கு உரமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக பயிர்களை விவசாயிகள் காப்பாற்றி வந்த நிலையில் மின்சாரமின்றி மின் மோட்டார் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் 25 ஏக்கரில் கருகி வரும் நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
2 மாத நெற் பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்து தங்குதடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நீடூர் உதவி மின் பொறியாளர் மூர்த்தி கூறுகையில் ஏராளமான மரங்களின் கிளைகள் முறிந்து மின்கம்பியில் விழுவதால் மரக்கிளைகள் வெட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் மின் இணைப்பு வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.