பூம்புகார் சுற்றுலா தலத்தில் சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரிக்கை
பூம்புகார் சுற்றுலா தலத்தில் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் சுற்றுலாதளம் அமைந்துள்ளது.இங்கு தமிழர்களின் வரலாற்றை நினைவுகூறும்.கண்ணகி,கோவலன் வாழ்க்கை வரலாறு சிற்பங்கள், சிலப்பதிகார கலைக்கூடம், நிலா முற்றம், நீச்சல் குளம், ஆகியவற்றுடன் நீண்ட கடற்கரையுடன் 33 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தமிழகத்தின் பெரிய சுற்றுலாதலமாக உள்ளது.
இங்கு நாள் தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது உண்டு. தற்போது கொரோனா பொது முடக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வந்து செல்லாததால் சுற்றுலா தலமே கலையிழந்து காட்சியளிக்கிறது.
இதனால் இங்கு அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்தும் சிதைந்தும் உள்ளது.மேலும் சிறுவர் பூங்கா வளாகம் முழுவதும் புதர் மண்டியும் கருவேல மரகாடுகளாகவும் காணப்படுகிறது. சிறுவர்களுக்கான, ஊஞ்சல், சறுக்குமரம், போன்ற விளையாட்டு சாதனங்கள் கருவேலமர காடுகளில் புதைந்து பழுதடைந்து பயனற்று கிடக்கிறது.
சிறுவர் பூங்கா திறந்தே கிடப்பதால் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சமூக விரோதிகள் பூங்காவை மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வருகின்றனர்.மின்விளக்கு இல்லாததால் மாலை நேரங்களில் உள்ளூர் வாசிகள் கூட அப்பகுதிக்கு செல்லமுடியாத நிலை உள்ளது.
தற்போது பூம்புகார் சுற்றுலா தலத்தில் புராதன சின்னங்கள்,கலைக்கூடம்,அருங்காட்சியகம் ஆகியவை புதுபிக்கபட்டு வரும் நிலையில் சிறுவர் பூங்காவையும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.