தமிழகத்தில் பொங்கல் விளையாட்டுப்போட்டி- அமைச்சர் மெய்யநாதன் தகவல்
தமிழகத்தில் விரைவில் பொங்கல் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
மயிலாடுதுறையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க. மாவட்ட தொழில்நுட்ப அணி சார்பில் ஆடவர் மற்றும் மகளிருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.. இந்திய விளையாட்டு ஆணையத்தின் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் 2ம் நாள் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சியை காணவந்த விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மகளிரக்கான அரைஇறுதி போட்டியை துவக்கி வைத்தார்.
முன்னதாக அமைச்சர் பேசுகையில் ஒலிம்பிக் போட்டியில் 1980-ஆம் ஆண்டுக்கு இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. அப்போது இந்திய அணியை வழிநடத்தியது வாசுதேவன் பாஸ்கர் என்ற தமிழர். அதன்பிறகு ஹாக்கியில் இந்தியா எந்த பதக்கத்தையும் பெறவில்லை. தற்போது 2021-இல் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. விளையாட்டு வீரர்கள் நிறைந்த மண் தமிழ்நாடு. விரைவில் தமிழகம் எங்கும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை மாநில அளவில் கொண்டுவந்து பயிற்சி அளித்து, தேசிய, சர்வதேச அளவில் அவர்களை உருவாக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் வைத்துள்ளார். இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 25 லட்சம் விளையாட்டு வீரர்களை உருவாக்க உள்ளோம். விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்திட வேண்டும். 100 சதவீத எனர்ஜி நமக்கு அதிகாலை வேளையில்தான் உள்ளது. உலகம் விழித்துக்கொள்ளும் முன் விளையாட்டு வீரர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்றார்.
இதில், எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், சென்னை, மதுரை, திருச்சி, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆடவர் பிரிவில் 7 அணியினர், மகளிர் பிரிவில் 5 அணியினர் பங்கேற்று, லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடைபெற்றது.