மயிலாடுதுறை அருகே கைதானவர்களுடன் சென்ற போலீஸ் வாகனத்தை மறித்ததால் பரபரப்பு
மயிலாடுதுறை அருகே கைதானவர்களுடன் சென்ற போலீஸ் வாகனத்தை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த 6-ஆம் தேதி அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டது.. இதில், இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டது தொடர்பாக மணல்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து இருதரப்பையும் சேர்ந்த 8 பேரை கைது செய்தனர். இந்நிலையில் மேட்டூரில் வேலை பார்த்துகொண்டிருந்த ஆனந்தராஜ்(33), சங்கர்(28) ஆகியோர் கடந்த 10ம் தேதி பட்டவர்த்திக்கு சங்கரின் தாயார் இறந்ததை அடுத்து வந்துள்ளனர்.
இருவரையும் 6ம் தேதி சம்பவத்தில் தொடர்புடையர்கள் என்று மணல்மேடு போலீசார் விசாரணைக்காக மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கடந்த 6ம் தேதி நடந்த சம்பவத்தின் போது மேட்டூரில் வேலைபார்த்ததற்கான ஆதாரங்களை அவரது உறவினர்கள் காட்டியும் போலீசார் அவர்களை விடாமல் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் துரைராஜ், ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் ஆனந்தராஜ். சங்கர் ஆகியோரை அழைத்து சென்ற போலீஸ் வாகனத்தை காவல் நிலையம் முன்பு தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் இருவரையும் விடுவித்தனர். கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் தெரியாததால் 41(A) நோட்டீஸ் வழங்கி விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஆவணங்களை சமர்ப்பித்ததால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மயிலாடுதுறை டி.எஸ்.பி. வசந்தராஜ் தெரிவித்தார்.