மயிலாடுதுறையில் சிசிடிவி பதிவின் மூலம் திருடர்களை போலீஸார் கைது செய்தனர்
மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 2 திருடர்களை சிசிடிவி பதிவுகளைக் கொண்டு போலீஸார் கைது செய்தனர்;
மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 2 திருடர்களை சிசிடிவி பதிவுகளைக் கொண்டு அடையாளம் கண்டறிந்து மயிலாடுதுறை போலீஸார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை செங்கமேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராஜூ மனைவி சூர்யா (33). இவர் கடந்த 14-ஆம் தேதி வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அதிகாலை வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின்பேரில் போலீசார் வாகனம் காணாமல் போன பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் மயிலாடுதுறை அருகே கிளியனூர் யாசர் அராபத் தெருவை சேர்ந்த தாஜூதீன் மகன் முகமது அசாருதீன்(25), மயிலாடுதுறை அருகே வழுவூர் திருநாள்கொண்டச்சேரி ரயிலடி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் உத்திராபதி (35) என்பது தெரியவந்தது. இதனையடுத்து முகமது அசாருதீன், உத்திராபதி ஆகியோரை கைது செய்த மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் சேதுபதி வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.