பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சீர்காழியில் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சபாநாயகம் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் இன்று பிளாஸ்டிக் பொருட்களான டீ கப், அன்றாடம் பயன்படுத்தும் கேரிபேக், தெர்மகோல் உள்ளிட்ட பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் சீர்காழி நகராட்சி சார்பில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் பட்டுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் நீர்நிலைகள் மாசடைவதையும், நிலத்தடி நீர் மண்ணுக்குள் செல்ல தடை ஏற்படுவதையும் எடுத்துக்கூறிய ஆணையர் மெழுகு தடவப்பட்ட டீ கப்பில் தேநீர் அருந்துவதால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் வர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார் .
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விவரங்களையும் , எவற்றையெல்லாம் நாம் பயன்படுத்த வேண்டும் என்பனஅடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.இதில் நகராட்சி அதிகாரிகள் , பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.