திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் 50 சதவீத கொள்ளளவுடன் நடத்திக்கொள்ள அனுமதிக்கக் கோரி மயிலாடுதுறையில் ஒலி, ஒளி, பந்தல், மேடை மற்றும் மணவறை அமைப்பாளர்கள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொழிற்சாலைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் 50 சதவீத பயன்பாட்டுடன் இயங்க தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் ஒலி, ஒளி, பந்தல், மேடை மற்றும் மணவறை அமைப்பாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் சங்க மாவட்ட தலைவர் நக்கீரன் தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் மற்ற துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை போன்று திருமண மண்டபங்களில் 50 சதவீத கொள்ளளவுடன் சுபநிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும், அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி கோயில் விழாக்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், திருவிழாக்களை நடத்தவும் அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.