சீர்காழி அருகே மறியல் போராட்டம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை
சீர்காழி அருகே பொதுமக்கள் அறிவித்த மறியல் போராட்டம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை பணிக்காக விளைநிலங்கள். வீட்டு மனைகள். குடியிருப்புகள் என பல்வேறு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலங்களுக்கு அரசு வழங்குவதாக உறுதியளித்த தொகையை வழங்காமல் மிகக்குறைந்த தொகை வழங்குவதாக கூறி விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதையடுத்து தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை உயர்த்தி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் மேல்முறையீடு செய்துள்ளனர். ஓராண்டு காலமாக மேல் முறையீட்டின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து அவர்களுடன் சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் முன்னிலையில் சீர்காழியில் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து கோட்டாட்சியர் ஒரு மாத காலத்திற்கு போராட்ட அறிவிப்பை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.