செம்பனார்கோவில்: ஆளும் கட்சியினரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் போராட்டம்

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ஆளும் கட்சியினரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-02 03:49 GMT

செம்பனார் கோயில் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் ஆகியவற்றின் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் பணிகளில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதை கண்டித்து செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடுக்கரை ஊராட்சி மன்ற தலைவர் பிரேம் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் 22 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏழு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அரசின் வழிகாட்டு நெறிமுறைபடி கிராம ஊராட்சிகள் மூலமாகவே நிறைவேற்ற வேண்டும், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் ஆளுங்கட்சியினர் அரசியல் தலையீடுகள் மற்றும் அபகரிப்புகள் இல்லாமல் சுதந்திரமாக சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகள் மூலமாகவே நிறைவேற்றுதல் வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி ஆணைகளை வழங்கும் அதிகாரத்தை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து பணிகளை நிறைவேற்ற வேண்டும், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ஊராட்சி நிதியை பாகுபாடின்றி வழங்க வேண்டும், அனைத்து ஊராட்சிகளுக்கு தேவையான சாலை குடிநீர் மற்றும் மயான மேம்பாடு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் ஆய்வின் போது நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கோரிக்கை மனுவினை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மஞ்சுளாவிடம் கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனரை சந்திப்பதற்காக அலுவலக அறை வாசலில் காத்திருந்தனர். வெளியே வந்த ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜை வழிமறித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Tags:    

Similar News