மயிலாடுதுறையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்காக மாவட்டம் முழுவதும் 103 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து 1 லட்சத்து 85 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 1 லட்சத்து 60 ஆயிரம் டன் நெல், கிடங்குகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சம்பா உற்பத்தி அதிகமானதால் கிடங்குகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. மேலும் 25 ஆயிரம் டன்கள் ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ளது.
நெல் மூட்டைகள் மாதக்கணக்கில் வெயிலில் கிடப்பதால் அடிமூட்டைகள் சேதம் ஏற்படும் என்றும், கால்நடைகள் தின்றுவிடுவதாலும் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், அவற்றை உடனடியாக கிடங்குக்கு கொண்டு செல்ல கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்றும், இன்றும் பெய்து வரும் கோடை மழையால் மயிலாடுதுறையில் வில்லியநல்லூர், மல்லியம், முளப்பாக்கம், மங்கைநல்லூர், பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது.
மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க கொடுக்கப்பட்ட தார் பாய்கள் சேதமடைந்து உள்ளது. தார் பாய் போட்டும் பயனில்லை என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றும் அவற்றை கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.