மயிலாடுதுறை: கனமழையால் சாய்ந்த நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் சாய்ந்த நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கன மழையால் அறுவடை செய்ய வேண்டிய சம்பா தாளடி பயிர்கள் பல்வேறு இடங்களில் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிரிடப்பட்டு கடந்த ஒரு மாதமாக அறுவடை நடைபெற்று வருகிறது. 1 லட்சம் ஏக்கருக்கு மேல் அறுவடை செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை அருகே உள்ள சேமங்கலம் ஊராட்சியில் சேமங்கலம், எருமல்,கூத்தூர் மற்றும் உளுத்து குப்பை, நாகங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500 ஏக்கரில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. இரண்டு நாட்களாக தண்ணீரில் மூழ்கி கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை நீடித்தால் முற்றிலும் பயிர்கள் சேதம் அடையும் நிலையில் உள்ளது.
முற்றிய நெல்மணிகள் உதிர்ந்து விடும் என்றும் அறுவடை செய்யும் போது மகசூல் இழப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டு பாதிப்பை சந்திக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.