மயிலாடுதுறை மாவட்டத்தில், ஆன்லைன் மூலமாக நெல் கொள்முதல் செய்யும் பணி
மயிலாடுதுறை மாவட்டத்தில், நடப்பு சம்பா பருவத்திற்கு ஆன்லைன் மூலமாக நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் தகவல்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 165 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பா கொள்முதல் பருவத்திற்கு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி ஆன்லைன் மூலமாக பதிவுகள் மேற்கொண்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண் மற்றும் சர்வே புல எண், உட்பிரிவு எண், பயிரிட்ட நெல்லின் பரப்பளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு தனியார் பொது சேவை மையத்திலோ அல்லது அரசு சேவை மையத்திலோ அல்லது கைப்பேசியிலோ பதிவுகள் மேற்கொண்டு கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதலுக்கு பிறகு கொள்முதல் நிலைய எழுத்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும்.
இந்த நடைமுறையில் ஏற்பட்டு வரும் சிறு அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக வருவாய்த்துறையும், பிர்கா வருவாய் அலுவலர்கள் அலுவலகங்களில் தலா இரண்டு அலுவலர்கள்; வாயிலாகவும் விவசாயத்துறையின் மூலம் உதவி வேளாண் விரிவாக்க அலுவலகங்களில் தலா இரண்டு அலுவலர்கள் வீதமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலகு அலுவலகத்தில் இரண்டு தலைமை கணினி இயக்குபவர்கள் வாயிலாகவும் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கண்காணிப்பாளர்கள் நிலையில் பத்து கொள்முதல் நிலையங்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு நெல் கொள்முதல் பதிவுக்கு பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோவிந்தன் என்ற கணினி மேற்பார்வையாளர் மேற்கண்ட பணியாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உதவிட நியமனம் செய்யப்பட்டுள்ளார். விவசாயிகள் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு எளிய முறையில் தங்களுடைய விவரங்களை பதிவுகள் செய்து நெல்லை கொள்முதல் செய்து பயன்பெற இதன் வாயிலாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இந்த அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நெல் கொள்முதல் பணி சிறப்பான செயல்பாட்டிற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மயிலாடுதுறை மாவட்டம் செயல்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மயிலாடுதுறை மாவட்டம் அலகு அலுவலகம் சித்தர்காட்டின் மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் ஜி.சீத்தாராமன் எண். 9176715451, தரங்கம்பாடி மற்றும் சீர்காழி முருகன் எண். 9380009323 ஆகிய தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ சந்தித்து விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது