திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் மழையால் 3500 டன் நெல் பாதிப்பு

மயிலாடுதுறை அருகே திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் மழையால் 3500 டன் நெல் பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-03-07 11:47 GMT
மழையில் நனையும் நெல் மூட்டைகள்.

சீர்காழி அருகே டி.மணல் மேடு கிராமத்தில் அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு இயங்கிவருகிறது. சீர்காழி தாலுகாவில் அறுவடை செய்யப்படும் 3500 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இந்த திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த நெல் சேமிப்பு கிடங்கு தாழ்வான பகுதியில் உள்ளதால் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையால் சேமிப்புக் கிடங்கை சுற்றி தண்ணீர் தேங்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதிப்படைந்து முளைக்கத் தொடங்கின.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து தாழ்வான பகுதியில் இயங்கிவந்த இந்த சேமிப்புக் கிடங்கை மூடுவதற்கு உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதாக உத்தரவாதம் அளித்து இருந்தனர். இந்நிலையில் மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது வரை நெல் மூட்டைகளை வேறு இடத்திற்கு மாற்றாமல் புதிதாக நெல் மூட்டைகளை அதே இடத்தில் சேமிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று இரவிலிருந்து விடிய விடிய பெய்த கன மழையால் சேமிப்பு கிடங்கு சுற்றி தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளது. இதனால் சரியான முறையில் பாதுகாக்கப்படாமல் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த திறந்தவெளி மேல் சேமிப்புக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News