ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடம் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

குத்தாலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடம் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.

Update: 2022-01-27 16:59 GMT

குத்தாலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் இடம் மீட்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின்கீழ் மன்மதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கோயில் பின்புறம் மணவெளி தெருவில் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 6,600 சதுர அடி பரப்பளவில் உள்ள இடம் சம்பந்தம், ராமையா என்பவர்களின் வசம் உள்ளது. அந்த இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன் தியாகராஜன், என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். பகுதி பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

கமர்ஷியல் கட்டணத்தில் உள்ள அந்த இடத்திற்கு 14 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன் மற்றும் அறநிலையத்துறை வட்டாட்சியர் விஜயராகவன் முன்னிலையில் அதிகாரிகள் தியாகராஜன் என்பவர் வசம் உள்ள இடத்தை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர்.

அப்போது அங்குவந்த மயிலாடுதுறை தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வீட்டில் குடியிருப்பவர்களுக்கு கமர்ஷியல் கட்டணம் வசூலிப்பதாகவும், அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதிகாரிகள் ஒத்துகொள்ளாததால் எம்.பி. ராமலிங்கம் திரும்பி சென்றார். தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து குத்தாலம் வட்டாட்சியர் பிரான்ஸ்வா, குத்தாலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின் ஆக்ரமிப்பு இடம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்ற பதாகையை வைத்து கம்பிவேலி போட்டு அடைத்தனர். இதன்முலம் 6மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்துது. இச்சம்பவம் குத்தாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News