வடகிழக்கு பருவமழை: தரங்கம்பாடியில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் வடகிழக்கு பருவமழையையொட்டி மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தனியார் திருமணமண்டபத்தில் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னங்குடி, சின்னமேடு, சின்னனூர்பேட்டை, குட்டியாண்டியூர், தாழம்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவபஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து மீனவர்கள் மழை மற்றும் புயல் காலங்களில் தங்கள் படகுகளை கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும், புயல் எச்சரிக்கைகளை மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும், குடித்துவிட்டு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் நலவாரிய அட்டைகள், வாக்கி டாக்கி படகுகளுக்கான உரிமம் கட்டணம் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். மீனவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி இயக்குனர் சண்முகம் உறுதி அளித்தார்.
இக்கூட்டத்தில் நாகை கடலோர அமலாக்கத்துறை ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், செல்விவெர்ஜீனியா, தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன், சீர்காழி,தரங்கம்பாடி மீன்வளத்துறை சார் ஆய்வாளர் சதுருதீன் மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் பலர் கலந்து கொண்டனர்.