நீட் தேர்வு மசோதா மீண்டும் நிறைவேற்ற ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை
நீட் தேர்வு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டுவந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநருக்கு அனுப்பி இருந்தார். குறிப்பாக ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் இந்த நீட் தேர்வால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்கொலைகளும் தொடர்ந்து நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்கள் மீது அக்கறை கொண்ட முதல்வரால் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. மசோதா குறித்து ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் சட்டமன்றத்திற்கு அந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருப்பது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக அரசு பள்ளி கிராமப்புற மாணவர்கள் எல்லாம் மிகவும் வேதனையில் உள்ளனர். ஊரகப்பகுதி மற்றும் கிராமப் பகுதி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி அந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருப்பதை ஏற்க முடியாதது. நீட் தேர்வு என்பது ஒரே தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறும் நிலையில் இல்லை. இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் தேர்வு எழுதியவர்கள் மட்டுமே வளமான வெற்றி பெற்றுள்ளனர். இதற்காக மாணவர்கள் பல லட்சக்கணக்கில் செலவு செய்து தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் நிலை உள்ளது. இந்த நிலை ஏழை எளிய மாணவர்களுக்கு சாத்தியப்படாது கவர்னரின் இந்த கூற்றானது ஆசிரியர்களான எங்களுக்கு புரியவில்லை.
ஏழை மாணவர்களுக்கு போதிய நீட் தேர்வு பயிற்சி மையங்கள் இல்லாததால் சமீபகாலமாக பள்ளி சேர்க்கையின்போது அறிவியல் பாடத்தை எடுக்கும் மாணவர்கள் அதனை தவிர்த்து வேறு பிரிவுகளில் பயின்று வருகின்றனர். நிச்சயம் நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக தமிழக அரசு விரைவில் புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றி தமிழகத்திற்கு விலக்கு பெற்றிட முதல்வர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.