மயிலாடுதுறை: கோவில் காவலாளியை கொன்று நகை திருட முயன்றவர் கைது
மயிலாடுதுறையில், கடந்த ஆண்டு கோயிலில் திருட முயன்ற போது தடுத்த காவலாளியை கொலை செய்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றங்கரையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தங்கி இரவுநேர காவலராக பணியாற்றி வந்தவர், செங்கமேட்டுத் தெருவை சேர்ந்த சாமிநாதன்(55) .
கடந்த ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி, சாமிநாதனை தாக்கி கொன்றுவிட்டு, கோயிலில் உண்டியலில் பணம் திருட முயன்றார். படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாமிநாதன் மே மாதம் 14-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளை கொண்டு மர்மநபரை தேடிவந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் மருதகுடியை சேர்ந்த கோவிந்தராஜ் (42) என்பவர், இதை செய்ததை கண்டறிந்தனர். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.