குத்தாலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்ட பெண்களால் பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்ட போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள சாலை கடந்த 11 வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைபெய்தால் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. சாலையை செப்பனிடக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வருவாய் துறையினரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலையை செப்பனிடாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வைகல் கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவரது வயலில் சம்பா நடவு செய்வதற்கு வெளியூரிலிருந்து வேலைக்காக வந்த பெண்கள் சாலை மிக மோசமாக இருப்பதை கண்டு வயல்போல் சாலை உள்ளதாக கூறி நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு உணர்த்தும் விதமாக சேறும், சகதியுமாக உள்ள சாலையில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி நாற்றுகளை நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி கிராமமக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.