தரங்கம்பாடி அருகே எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
தரங்கம்பாடி அருகே அதிமுக சார்பில், எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34ஆம் ஆண்டு நினைவு தினம், நேற்று நாடு முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, செம்பனார்கோவில் கடைவீதியில் அதிமுகவினரால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய செயலாளர்கள் ஜெனார்த்தனம், வி.ஜி.கண்ணன், மகளிரணி மாவட்ட செயலாளர் சக்தி, பொது குழு உறுப்பினர் கபாடி பாண்டியன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி மௌனஅஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செம்பனார்கோவில் கடைவீதியில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து, மௌன அஞ்சலி செலுத்தினர்.