மயிலாடுதுறையில் மாநில அளவிலான ஆடவர், மகளிர் கைப்பந்து போட்டி தொடக்கம்
மயிலாடுதுறையில் மாநில அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் கைப்பந்து போட்டி தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி துவங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, மதுரை, திருச்சி, மயிலாடுதுறை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆடவர் பிரிவில் ஏழு அணிகளும் மகளிர் பிரிவில் ஐந்து அணிகள் பங்கேற்று லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் போட்டி நடைபெறுகிறது.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாகை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக நடைபெறும் இப்போட்டியில் ஆடவர் பிரிவில் முதலிடத்தை பிடிப்பவர்களுக்கு 25 ஆயிரம் இரண்டாம் பரிசு பெறுபவருக்கு 20 ஆயிரம் என 5 அணிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இதேபோல் மகளிர் பிரிவில் முதல் பரிசாக ரூபாய் 20 ஆயிரமும் இரண்டாவது பரிசாக 15 ஆயிரம் உள்ளிட்ட ஐந்து அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு 50 ஆயிரம் மதிப்பிலான பரிசு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியும் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியானது நாக் அவுட் சுற்றில் நடைபெறுகிறது. மாநில அளவிலான ஆடவர் பிரிவு போட்டிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மயிலாடுதுறை சாய் அணி- திருச்சி ஜெயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதியது.
இதேபோல் மகளிருக்கான முதல் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். யூனிவர்சிட்டி- மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் மயிலாடுதுறை சாய் அணியினர் பங்கேற்றனர். பரபரப்பாக நடைபெற்ற போட்டிகளை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஶ்ரீதர், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பார்வையாளர்கள் போட்டிகளை கண்டு ரசித்து அணியினரை உற்சாகப் படுத்தினர்.