மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவம்: ஓலைச்சப்பரத்தில் அம்பாள் வீதியுலா

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவத்தில், அலங்கரிக்கப்பட்ட ஓலைச்சப்பரத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது.;

Update: 2021-11-12 02:30 GMT

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவத்தின் 5-ஆம் நாள் திருவிழாவில், மின்ஒளியில் அலங்கரிக்கப்பட்ட ஓலைச்சப்பரத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம்,  30 நாட்களும் நடைபெறும் துலா உற்சவம் மிகப் பிரசித்தி பெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும்,  மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில்,  ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கிகொண்டதாக புராணம் கூறுகிறது. இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில், ஐப்பசி 1-ஆம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும் பத்துநாள் உற்சவமாக,  மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து,  பஞ்ச மூர்த்திகள் காவிரிகரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு துலா உற்சவம் கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 5-ஆம் நாள் திருவிழாவான நேற்றிரவு, தீர்த்தவாரி நடைபெற்று, இரவு சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் எழுந்தருளினர். மாயூரநாதர் அபயாம்பிகை,  வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளினர். மகாதீபாரதனை நடைபெற்றது.

பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு செதுர்தேங்காய் உடைத்து சப்பர ஓட்டத்தை தொடக்கிவைத்தார். பின்னர் கோயில் யானை அபயாம்பிகை வணங்க மேளதாள வாத்தியங்களுடன் மின்னொளி ஓலைச்சப்பரம் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. பக்தர்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News