மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம்
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள மாயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும். மயிலாடுதுறையில் துலா கட்ட காவிரிக்கரையில் புனித நீராடி அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததாக வரலாறு. காவிரியில் ஐப்பசி மாதம், கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கி கொண்டதாக ஐதீகம்.
இதனை முன்னிட்டு, ஐப்பசி மாதம் 10 நாட்களும் மயிலாடுதுறையில் அமைந்துள்ள அனைத்து ஆலயங்களின் சுவாமி, அம்பாள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான துலா உற்சவம் மாயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், படித்துறை விஸ்வநாதர் ஆலயம், அய்யாரப்பர் ஆலயம், காசி விஸ்நாதர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது, மாயூரநாதர் -- அவையாம்பாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மாயூரநாதர், அபயாம்பிகையுடன், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.