மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு வரவேற்பு..
Mayuram Vedanayagam Pillai-மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Mayuram Vedanayagam Pillai-மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை கி.பி. 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் பிறந்தவர். மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக பணியாற்றிய இவர், மயிலாடுதுறை நகராட்சியில் முதல் நகர்மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இதன்காரணமாக இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக பல்வேறு தமிழ், இலக்கிய நூல்களை எழுதியவர். வெளிநாடுகளில் பிரபலமாகி வந்த நாவல் கதைகளைப்போன்று, பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதி தமிழின் முதல் புதினத்தை இயற்றியவர் என்ற பெயர் பெற்றார்.
இவரது நினைவிடம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் காந்திஜி சாலையில் அமைந்துள்ளது. தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை, மயிலாடுதுறை முத்தமிழ் மன்றம், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம், மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர், தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2