கிராம நிர்வாக அலுவலரின் மும்மத சமய புரட்சித் திருமணம்
கிராம நிர்வாக அலுவலரின் மும்மத சமயபுரட்சித்திருமணம், மத ஒற்றுமையின் புதிய வழிகாட்டுதல் முதன்மைத் திருமணம் என நண்பர்கள் புகழாரம்.;
திருமணங்களில் சம்பரதாய திருணமணம், சீர்திருத்தத்திருமணம் என இரண்டு பதிவு அலுவலக திருமணம், கோயில் திருமணம் என பல வகை திருமணங்களை கேள்விப்பட்டிருக்கிறோம், பெரும்பாலும் மத சம்பரதாய திருமணங்களாக இருப்பதை பார்த்திருப்போம், அனைத்துத் திருமணங்களிலும் சமய பாகுபாடு இல்லாமல் நண்பர்கள் கலந்துகொள்வது நடைமுறை,
ஆனால் ஒரே ஜோடி இந்து, கிறித்துவ, இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொள்வது என்பது கேள்விப்படாத ஒன்றாகும். இந்த அதிசய திருமணம் மயிலாடுதுறையில் நடைபெற்றது, அதுவும் அரசு ஊழியர் ஒருவர் துணிச்சலாக தனது நண்பர்களின் ஆலோசனையையைப் பெற்று இந்த காரியத்தை செய்துள்ளார்.
மயிலாடுதுறை நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி புருஷோத்தமன், இவர் போட்டித்தேர்வுமூலம் தேர்வு பெற்று தபால்துறையில் பணியாற்றிவந்தார். டிஎன்பிஎஸ்சி எழுதி கிராம நிர்வாக அலுவலர் வேலையில் தரங்கம்பாடி சேத்தூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகராகப் பணியாற்றிவருகிறார்.
இவர் திருவையாற்றை சேர்ந்த புவனேஸ்வரி என்ற எம்.காம் பட்டதாரியை திருமணம் பேசி முடித்தார். தனது நண்பர்களுடன் கலந்துபேசி சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகவும் அனைத்து மதத்தினரும் உறவினர்களே, ஹிஜாப் என்ற பிரச்னையால் எந்த மதங்களுக்குள்ளும் பிரிவினை வரக்கூடாது என்றும் மதத்தால் பிரிந்திருந்தாலும் பழக்கத்தால் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்பதை புதிய முறையில் தமது திருமணம் மூலம் செய்துகாட்டுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி மூன்று மத முறைப்படியும் நமது திருமணம் நடைபெறவேண்டும் என்று முடிவெடுத்து பெண்வீட்டாருக்குத் தெரிவித்தனர்,
இதைக் கேள்விப்பட்ட பெண்வீட்டாரும் நல்ல முயற்சி என்று வரவேற்றனர். மூன்றுமத முறைப்படியான திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மயிலாடுறையில் உள்ள திருமணமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்து முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும், 26ஆம் தேதி மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது என்று பத்திரிகை அடித்து விநியோகம் செய்யப்பட்டது,
குறித்த தேதியில் மயிலாடுதுறை விமலாம்பிகை திருமண மண்டபத்தில் இஸ்லாமிய முறைப்படியான ஆடைகளை அணிந்துவந்து மேடைடியல் அமர்ந்த இளஞ்ஜோடிகளான புருஷோத்தமனுக்கும் புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மௌலானா இஸ்லாமிய முறைப்படி திருமண நோக்கம் மற்றும் கணவன் மனைவி கடமைகள் பற்றியும் எடுத்துக்கூறி ஆசீர்வதித்து திருமணத்தை நடத்திவைத்தார்.
அதன்பிறகு கிறித்தவ முறைப்படி ஆடைஅலங்காரங்களை செய்துகொண்டு மணமேடையில் அமர்ந்த புருஷோத்தமன் புவனேஸ்வரி தம்பதியினருக்கு மங்கைநல்லூர் கிறித்துவ போதகர் தலைமையில் கிறித்துவ முறைப்படி அறிவுரைகள் வழங்கப்பட்டு இளஞ்ஜோடிகள் தங்களது கைகளில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துவைக்கப்பட்டனர்.
இன்று காலை 9 மணிக்கு இந்து முறைப்படியான திருணம் நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற இரண்டுதிருமணங்களைக் கண்டுகளித்த உறவினர்களும் நண்பர்களும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர், இந்தியாவிலேயே முதன்முதலான முயற்சி என்றும் தமிழகத்தில் எந்த காலத்திலும் மத மோதல் வராமலிருக்க இதுபோன்ற திருமணங்கள் மேன்மேலும் அரணாக இருக்கும் என்றும் கிராம நிர்வாக அலுவலரின் இந்த புதிய முயற்சியை உறவினர்கள் மட்டுமின்றி அனைவரும் வரவேற்றனர், திருமண உலகில் புதிய முயற்சி புரட்சிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பாராட்டிச்சென்றனர்.