மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா: திரளானோர் பங்கேற்பு
மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா - தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு.;
மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா - தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு.
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத் திருவிழா கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு திருப்பலி மற்றும் திருத்தேர்பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் "நாளைக்காக கவலைப்படாதீர்கள்" என்ற தலைப்பில் தஞ்சாவூர் புனித ஆரோக்கிய அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் அருட்திரு.செபாஸ்டின் பெரியண்ணன் அடிகளார் மறையுரையாற்றினார்.
இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர்பவனி அரசு மருத்துவமனை சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், மரியாயின் சேனையினர், பாடகற்குழுவினர், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.