மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் குழந்தையுடன் பெண்ணை காப்பாற்றிய ஆய்வாளர்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் குழந்தையுடன் பெண்ணை காப்பாற்றிய ஆய்வாளருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2022-01-21 11:18 GMT

மயிலாடுதுறை ரயில் நிலையம் (கோப்பு படம்).

மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மங்களம் (65). இவர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்புவதற்காக அவரது மகள்கள் தையல்நாயகி(32), கவிதா(30) ஆகியோர் உடன் வந்துள்ளனர். மங்களத்தை ரயிலில் ஏற்றி இருக்கையில் அமர வைத்துவிட்டு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது ரயில் புறப்பட்டதைக் கண்டு சகோதரிகள் இருவரும் அவசரமாக ரயிலை விட்டு கீழே இறங்கினர். கவிதா தனது குழந்தையுடன் கீழே இறங்கும் போது தடுமாறி விழுந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்துக்கொண்டு, ஓடிச்சென்று நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்த கவிதாவையும், அவரது 8 மாத குழந்தையையும் தனது கால்களால் தாங்கிப் பிடித்து எந்தவித காயமும் இன்றி காப்பாற்றினார். இதில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமாருக்கு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதிர்குமார், உதவி ஆய்வாளர்கள் தனசேகரன், துரைசிங்கம், காவலர் அருள்குமார் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய சகோதரிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தன் உயிரைப் பணயம் வைத்து தாய், குழந்தையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமாரின் சமயோஜித செயலுக்கு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News