மயிலாடுதுறையில் புதுத்தெரு மகா காளியம்மன், பெரிய மாரியம்மன் கரக உற்சவம்
மயிலாடுதுறை புதுத்தெரு மகா காளியம்மன், கொத்தத்தெரு பெரிய மாரியம்மன் கோயில்களில் கரக உற்சவம். சமூக விலகலை கடைபிடித்து வீதி உலா இல்லாமல் உற்சவம் எளிமையாக நடைபெற்றது.
மயிலாடுதுறையில் பழைமையும், பிரசித்தியும் வாய்ந்த புதுத்தெரு மகா காளியம்மன், கொத்தத்தெரு பெரிய மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்த இரு அம்மன்களும் சகோதரிகள் என அப்பகுதியினரால் வணங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் காவிரி துலாக்கட்டத்திலிருந்து இந்த இரண்டு கோயில்களுக்கும் கரகங்கள் எடுத்து, ஏராளமான பக்தர்கள் புடைசூழ வீதி உலாவாக சென்று கோயில்களை அடைவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, வீதி உலா ரத்து செய்யப்பட்டு, அருகாமையில் உள்ள பஜனை மடத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூங்கரகங்கள் புறப்பட்டு, நடைபாவாடை விரிக்கப்பட்டு கரகங்கள் கோயிலை வந்தடைந்தன. இதில் பக்தர்கள் சமூக விதிகளை கடைபிடித்து, முகக் கவசங்கள் அணிந்து பங்கேற்று தரிசனம் செய்தனர்.