மயிலாடுதுறை அரசு அலுவலகங்களில் மின்சாரம் வீணடிக்கப்படுவதாக புகார்
மயிலாடுதுறை அரசு அலுவலகங்களில் மின்சாரம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் மின்வெட்டால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்பற்றாக்குறை காரணமாக தொடரும் இந்நிலைக்கு மின்சாரம் தட்டுபாட்டை குறைக்க மின்சாரத்தை சேமிக்க வேண்டியது அவசியம் என அரசு தரப்பில் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிக அளவில் மின்சாரம் வீணடிக்கப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறாத நிலையில் ஆளில்லாத மேஜைக்கு 10க்கும் மேற்பட்ட மின்விசிறியும், மின் விளக்குகளும்இயக்கப்பட்டன.
மாவட்டத்தில் இரவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின் தடை ஏற்படுவதால், தூக்கம் கெடுவதாகவும், தற்போது கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் நாள் வெப்பத்தால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.மின்சிக்கனத்துக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகளே, மின்சாரத்தை வீணடிப்பது வேதனைக்குறியதாகும். மின் சிக்கனம் என்பது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் தான் என்பதை அரசு அதிகாரிகள் உணர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..